புனித பேதுரு பேராலயம் (Saint Peter's Basilica) என்பது வத்திக்கான் நகரத்தில் அமைந்துள்ள தலைசிறந்த உரோமன் கத்தோலிக்க வழிபாட்டிடம் ஆகும்.
இதன் முழுப்பெயர் இலத்தீன் மொழியில் "பசிலிக்கா சாங்ட்டி பீட்ரி" (Basilica Sancti Petri) என்றும், இத்தாலிய மொழியில் "பசிலிக்கா பப்பாலே டி சான் பியேட்ரோ இன் வத்திக்கானோ" (Basilica Papale di San Pietro in Vaticano) என்பதும் ஆகும். உலகிலுள்ள கிறித்தவக் கோவில்களிலெல்லாம் மிக அதிகமான உட்பரப்பு கொண்ட கோவில் இதுவே. உரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இப்பெருங்கோவிலை மிகப்புனிதமான ஒன்றாகக் கருதுகின்றனர். கிறித்தவ உலகில் இதற்கு ஒரு தனி இடம் உண்டு .
இப்பேராலயத்தின் கீழ்ப் புனித பேதுருவின் கல்லறை அமைந்துள்ளது. சீமோன் என்னும் பெயர் கொண்ட பேதுரு இயேசுவின் பன்னிரு சீடர்களுள் தலைமையானவராகவும், உரோமை நகரின் முதல் ஆயராகவும் இருந்தார் என்பது மரபு. எனவே அவர் திருத்தந்தையர் வரிசையில் முதலானவராகவும் உள்ளார். புனித பேதுருவின் கல்லறைமீது இக்கோவில் கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் கிறித்தவத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே பேதுருவின் வழிவந்தவர்களாகிய பல திருத்தந்தையர் இக்கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். நான்காம் நூற்றாண்டிலிருந்தே இங்கு மன்னர் காண்ஸ்டண்டைன் கட்டிய ஒரு கோவில் இருந்தது. அந்தப் பழைய கோவிலின்மீது கட்டப்பட்டு எழுந்துநிற்கின்ற இன்றைய பேராலயக் கட்டட வேலை 1506ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் நாள் தொடங்கி, 1626ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் நாள் நிறைவுபெற்றது.
புனித பேதுரு பெருங்கோவில் சிறப்புமிக்க திருத்தலம் ஆகும். இங்கு நிகழ்கின்ற சிறப்பு வழிபாடுகளும், இதன் வரலாற்றுத் தொடர்புகளும் இதை ஒரு புகழ்பெற்ற வழிபாட்டிடமாக ஆக்கியுள்ளன. இக்கோவிலில் நடைபெறுகின்ற சிறப்பு வழிபாடுகளில் திருத்தந்தை வழக்கமாகப் பங்கேற்பார்.
கோவிலை அணுகிச் செல்ல "புனித பேதுரு வெளிமுற்றம்" (St. Peter's Square) என்னும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டும். இம்முற்றம் பரந்து விரிந்த ஒரு வெளி ஆகும். இரு பிரிவுகளாக அமைந்த இந்தப் பெருவெளியின் இருபுறமும் உயர்ந்த தூண்கள் நான்கு வரிசையாக உள்ளன. முதல் பிரிவு முட்டை வடிவிலும், இரண்டாம் பிரிவு சரிவக வடிவிலும் உள்ளது. பேராலயத்தின் முகப்பு உயரமான தூண்களைக் கொண்டதும், வெளிமுற்றத்தின் இறுதியில் நீண்டு அமைந்ததுமாகவும் உள்ளது. கோவிலின் வாயிலைச் சென்றடைய பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகளின் இருபக்கமும் 5.55 மீட்டர் (18.2 அடி) உயரமுள்ள புனித பேதுரு, புனித பவுல் சிலைகள் உள்ளன. இவ்விரு புனிதர்களும் உரோமையில் கிறித்தவ சமயத்தைப் பரப்பி, அங்கே மறைச்சாட்சிகளாக உயிர்நீத்தார்கள் என்பது மரபு.
வெளிமுற்றம்
புனித பேதுரு பெருங்கோவில் தன்னிலேயே உலகப் புகழ் பெற்றது. அக்கோவிலின் முன் அமைந்த பரந்த வெளிமுற்றம் கோவிலின் சிறப்பை இன்னும் அதிகமாக எடுத்துக்காட்டுகிறது .இம்முற்றத்தை 1656-1667இல் வடிவமைத்தவர் ஜான் லொரேன்ஸோ பெர்னீனி என்னும் தலைசிறந்த கட்டடக் கலைஞர் ஆவார். அரவணைப்பதற்கு நீட்டப்படுகின்ற கைகளைப் போல இம்முற்றத்தின் இரு பக்கங்களும் அமைந்துள்ளன. "திருச்சபை என்னும் அன்னை தன் இரு கைகளையும் விரித்து மக்களை அரவணைப்பதாக" இவ்வெளிமுற்றத்தை அமைத்ததாக பெர்னீனியே கூறியுள்ளார்.
தூண் வரிசைக் கூட்டம்
புனித பேதுரு வெளிமுற்றத்தின் இரு பக்கங்களிலும் மொத்தம் 284 சீர்நிலைத்தூண்களும் 88 மதில்தூண்களும் நான்கு நெடுவரிசையாக அமைந்து பிரமாண்டமான தோற்றத்தை அளிக்கின்றன. இத்தூண்கள் டோரிக் என்னும் கலைப்பாணியைச் சார்ந்தவை. இத்தூண்கள் வரிசையில் வலப்புறம் 70, இடப்புறம் 70 என்று 140 புனிதர்களின் திருச்சிலைகள் எழுகின்றன. இச்சிலைகளைச் செதுக்கிய சிற்பிகள் பலராவர். சிலைகள் செதுக்கப்பட்ட காலம் 1662-1703 ஆகும்.
கோவிலின் உள்
கோவிலுக்குள் நுழைந்ததும் உள் நடுப்பகுதியில் தரையில் பதிக்கப்பட்டுள்ள வட்டவடிவமான பளிங்குக் கல்தட்டை (porphyry slab) காணலாம். அந்த இடத்தில்தான், பழைய பேதுரு கோவில் உயர் பீடத்தின் முன் சார்லிமேன், பிற புனித உரோமைப் பேரரசர்கள் முழந்தாட்படியிட்டு, அரசர்களாக முடிசூடப்பட்டார்கள்.
புனித பேதுரு பெருங்கோவிலின் பிரமாண்டமான தோற்றத்திற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்குவது அதன் சிறப்புமிக்க குவிமாடம் (Dome) ஆகும்.கோவில் தளத்திலிருந்து இக்குவிமாடத்தின் உச்சிவரை 136.57 மீட்டர் (448.1 அடி) உயரம் உள்ளது. உலகத்திலுள்ள மிக உயர்ந்த குவிமாடம் இதுவே. பயணிகள் இக்குவிமாடத்தின் உச்சிவரை ஏறிச்செல்ல முடியும். குவிமாட வரைவை மைக்கலாஞ்சலோ 1547இல் திருத்தியமைத்தார். அப்போது அவருக்கு வயது 72. குவிமாட வேலையை அவர் முன்னின்று நடத்தினார். அதன் அடிமண்டபம் மட்டும் கட்டப்பட்ட நிலையில் அவர் 1564இல் இறந்தார்.
புனித பேதுருவின் நினைவாக எழுகின்ற இப்பெருங்கோவிலில் அவரைச் சிறப்பிக்கும் விவிலிய மேற்கோள் குவிமாடத்தின் உட்பகுதியில் இலத்தீன் மொழியில் செதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்தும் 2 அடி உயரம் கொண்டு, பிரமாண்டமாகத் தோற்றமளிக்கின்றது. மத்தேயு நற்செய்தியில் இயேசு பேதுருவை நோக்கிக் கூறிய சொற்கள் இவை (மத்தேயு 16:18-19). தமிழில்,
“ உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். விண்ணரசின் திறவுகோகோல்களை நான் உன்னிடம் தருவேன் ”
உயர்ந்தெழுகின்ற உச்சிப் பகுதியிலிருந்து கதிரவனின் ஒளிக்கதிர்கள் கோவில் உள்ளகத்தை ஒளிர்விக்கின்றன.குவிமாடம் அமர்ந்திருக்கின்ற நான்கு பெரிய தொகுப்புத் தூண்களின் உட்குவிப் பகுதியில் உயர்ந்த பளிங்குச் சிலைகள் உள்ளன.
கோவிலில் அடக்கம் செய்யப்பட்டுள்ள திருத்தந்தையருள் பதினாறு பேர்களின் ஓவியங்கள் குவி உள்ளன. இயேசு, மரியா, யோசேப்பு, திருமுழுக்கு யோவான், திருத்தூதர்கள் ஆகியோரின் ஓவியங்களும் இருக்கின்றன.
குவிமாடத்தின் உச்சிப்பகுதியில் விண்ணகக் காட்சி தோன்றுகிறது. அங்கே தந்தையாம் கடவுளின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. அவரைச் சூழ்ந்து வானதூதர்கள் உள்ளனர். அப்பகுதியின் வெளிவட்டத்தில் S. PETRI GLORIAE SIXTUS PP. V A. MDXC PONTIF. V என்னும் வாசகம் உள்ளது. அது தமிழில் "இக்கோவில் புனித பேதுருவின் மாட்சிமைக்காக, திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டசால் 1590ஆம் ஆண்டு, அவர்தம் ஐந்தாம் ஆட்சியாண்டுக் காலத்தில் கட்டப்பட்டது" என வரும்.
Comments
Post a Comment